உலகம் முழுவதும் 26–ந்தேதி எஸ்–3 படம் வெளியிடப்படுகிறது இயக்குனர் ஹரி தகவல்


உலகம் முழுவதும் 26–ந்தேதி எஸ்–3 படம் வெளியிடப்படுகிறது இயக்குனர் ஹரி தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2017 2:15 AM IST (Updated: 31 Dec 2016 9:22 PM IST)
t-max-icont-min-icon

எஸ்–3 படம் வருகிற 26–ந்தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது என்று படத்தின் இயக்குனர் ஹரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

எஸ்–3 படம் வருகிற 26–ந்தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது என்று படத்தின் இயக்குனர் ஹரி தெரிவித்து உள்ளார்.

எஸ்–3

இயக்குனர் ஹரி நேற்று மாலை தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

சிங்கம் படத்தின் 3–வது பாகம் எஸ்–3 என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் உள்ளனர். புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க ஆந்திரா மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதை அம்சத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இந்தி சினிமாவில் இருந்து புதிய வில்லன்கள் நடித்துள்ளனர். படத்தில் சில காட்சிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன.

26–ந்தேதி

எஸ்–3 படம் வருகிற 26–ந்தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. என்னுடைய இயக்கத்தில் பெரிய தொகையில் உருவாகி உள்ள படம் எஸ்–3. இது எனது 14–வது படம். இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இதில் ஆங்கில பாடல் உள்பட 7 பாடல்கள் உள்ளன. இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை எஸ்–3 கண்டிப்பாக பூர்த்தி செய்யும்.

அடுத்து நடிகர் விக்ரமுடன் சாமி படத்தின் 2–ம் பாகத்தை தயாரிக்க உள்ளோம். இந்த படத்தை விக்ரம் நடத்து வெளியான இருமுகன் படத்தின் தயாரிப்பாளர் சிபு தயாரிக்க உள்ளார். படத்தின் வேலை விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது தூத்துக்குடி லொக்கேசன் மேலாளர் சரவணன், தூத்துக்குடி தொழில் அதிபர் ஞானராஜ் அருகில் இருந்தார்.

Next Story