உளுந்தூர்பேட்டை அருகே புள்ளி மான்கள் வேட்டையாடிய 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி– மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


உளுந்தூர்பேட்டை அருகே புள்ளி மான்கள் வேட்டையாடிய 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி– மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:15 AM IST (Updated: 31 Dec 2016 11:28 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் 4 புள்ளி மான்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வனத்துறையினர் ரோந்து உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் பெ

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே காப்புக்காட்டில் 4 புள்ளி மான்களை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

வனத்துறையினர் ரோந்து

உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காலை எடைக்கல் வனப்பகுதி காப்புக்காட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று இறந்த நிலையில் இருந்த 4 புள்ளி மான்கள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி, 2 டார்ச் லைட்டுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைபார்த்த வனத்துறையினர் அவர்களை பிடிக்க விரைந்து சென்றனர். வனத்துறை அதிகாரிகள் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டை

இதில் உஷாரான வனத்துறையினர் விரட்டிச் சென்று மான்கள் மற்றும் துப்பாக்கியுடன் சென்ற 2 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் எறையூர் கிராமத்தை சேர்ந்த மரியசாமி மகன் அந்தோணி புஷ்பராஜ்(வயது 23), ஏசுராஜ் மகன் ஆரோக்கிய ஸ்டீபன்ராஜ்(23) மற்றும் தப்பியோடியவர்கள் அதேஊரை சேர்ந்த ராபர்ட், தாஸ் ஆகியோர் என்பதும் தெரிந்தது. மேலும் இவர்கள் 4 பேரும் நேற்று அதிகாலை 3 மோட்டார் சைக்கிள்களில் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டுக்கு சென்று 4 புள்ளி மான்களை வேட்டையாடி புத்தாண்டுக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து வனத்துறையினர், அந்தோணி புஷ்பராஜ், ஆரோக்கிய ஸ்டீபன்ராஜ் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட 4 புள்ளி மான்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு நாட்டு துப்பாக்கி, 2 டார்ச் லைட்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட புள்ளி மான்களை திருப்பெயர் கால்நடை மருந்தக மருத்துவ அலுவலர் முருகேசன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்து, அருகே உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.


Next Story