தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:30 AM IST (Updated: 31 Dec 2016 11:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நாகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குறைதீர்க்கும் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்ட

நாகப்பட்டினம்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நாகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் பிரபாகரன்:– கடுமையான வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. எனவே கிணறுகள், போர்வெல்கள் அமைத்து இலவச மின்சாரம் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்நிலைகள் அமைத்து தர வேண்டும். கிராம பகுதிகளில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம்:– தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். 2015–2016–ம் ஆண்டிற்கான தேசிய வேளாண் பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனே வழங்க ஆவண செய்ய வேண்டும். உளுந்து, பயறு விதைகளை மானியமாக வழங்கி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் பழனிசாமி:– நாகை மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை சராசரி மழை அளவைவிட குறைவாக பெய்துள்ளது. சம்பா தாளடி பயிர் அறுவடைக்கு பிறகு விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் 212.2 மெட்ரிக் டன், தனியார் துறையில் 74 மெட்ரிக் டன் உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் மற்றும் தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்

நெல் பயிருக்கான தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கைத்தெளிப்பான்கள், விசை தெளிப்பான்கள், பம்பு செட்டுகள், விதைக்கும் கருவிகள், சுழல் கலப்பைகள் ஆகிய கருவிகளும், நெல் பயிருக்கான தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் பவர் டில்லர்களும், பயறுவகை பயிருக்கான தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விசை தெளிப்பான்கள், பம்பு செட்டுகள், டிராக்டர்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனரகத்தை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிந்து அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் முழுவிலையினை செலுத்தி அதற்கான ஆவணங்களை வழங்கி பின்னேற்பு மானியமாக பெற்று பயன்பெறலாம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், நீர்வள ஆதார அமைப்பு, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், காவிரி கிழக்கு வடிநிலக் கோட்டம் மயிலாடுதுறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story