பல்வேறு கொள்ளை வழக்குகளில் ரூ.3¾ கோடி நகைகள்-பணம் பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல்


பல்வேறு கொள்ளை வழக்குகளில் ரூ.3¾ கோடி நகைகள்-பணம் பறிமுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2017 4:00 AM IST (Updated: 1 Jan 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் ரூ.3¾ கோடி மதிப்பில் நகைகள்-பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெ

திண்டுக்கல்,

மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் ரூ.3¾ கோடி மதிப்பில் நகைகள்-பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொலை வழக்குகள்

குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை, முக்கிய சந்திப்புகளில் 69 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் நகரில் மட்டும் 31 கேமராக்கள் உள்ளன. வழிப்பறி கொள்ளை, திருட்டுகளை தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு 40 ரோந்து வாகனங்கள் செயல்பட்டன. 2016-ம் ஆண்டில் 55 ரோந்து வாகனங்கள் அதிகரிக்கப்பட்டு, பூட்டிய வீடுகளும் தீவிர ரோந்து பணியால் கண்காணிக்கப்படுகின்றன.

குற்ற சம்பவங்களுக்கு உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதால், குற்றங்கள் குறைந்துள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 60 கொலை வழக்குகளும், 2015-ம் ஆண்டு 57 கொலை வழக்குகளும், 2016-ம் ஆண்டு 53 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன. அந்த வகையில் 2016-ல் கொலை வழக்குகள் 9 சதவீதம் குறைந்துள்ளன.

ரூ.3¾ கோடி மதிப்பில்...

இதுதவிர 2015-ம் ஆண்டு 81 கொலை முயற்சி வழக்குகளும், 602 காய வழக்குகளும் பதிவாகின. 2016-ம் ஆண்டு 73 கொலை முயற்சி வழக்குகளும், 470 காய வழக்குகளும் பதிவாகி உள்ளன. கொள்ளை சம்பவத்தை பொறுத்தவரை 2015-ம் ஆண்டு 42 வழக்குகளும், 2016-ம் ஆண்டு 20 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 2015-ம் ஆண்டு 157 திருட்டு வழக்குகளும், 2016-ம் ஆண்டு 125 திருட்டு வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. இது 10 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு கொள்ளை வழக்குகளில் ரூ.3 கோடியே 79 லட்சத்து 23 ஆயிரத்து 637 மதிப்பில் நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ரவுடிகளை ஒடுக்கும் வகையில் 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,527 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன. வாகன விபத்தை தடுப்பதற்காக தணிக்கை செய்யப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 487 வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களுக்கு உதவி

மேலும் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 21 பேருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும். தாடிக்கொம்பு போலீஸ் சரகத்தில் சம்பவம் நடந்து 19 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் தேக்கத்தில் இருந்த 237 வாகனங்கள் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்து 301-க்கு ஏலமிடப்பட்டது. சைபர் குற்றங்களை தடுப்பதற்கு வங்கி, ஏ.டி.எம். மையங்கள், அரசு பஸ்களில் விழிப்புணர்வு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் மலைவாழ் மக்களின் வசதிக்காக மூங்கில்பள்ளம், வலாங்குளம் பகுதியில் 12 சோலார் விளக்குகள், 330 வீடுகளுக்கு மழைக்காலத்தில் ஒழுகாமல் இருக்க தார்பாய்கள் வழங்கங்கப்பட்டுள்ளன. மலைக்கிராம மாணவர்கள் 33 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பயிற்சி, கல்வி, விளையாட்டு, மருத்துவம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

Next Story