ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை


ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 1 Jan 2017 3:45 AM IST (Updated: 1 Jan 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புனித கேத்தரின் ஆலயம் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரின் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு கடந்த வருடம் ஏசு செய்த அனைத்து கொடை

திருப்பூர்,

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

புனித கேத்தரின் ஆலயம்

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரின் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு கடந்த வருடம் ஏசு செய்த அனைத்து கொடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஆராதனை நடந்தது. இதை ஆலய பங்கு தந்தை மரியசூசை நடத்தினார். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலி தொடங்கியது. திருப்பலி முடிந்தவுடன் புதிய சிலுவை பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி, 10.15 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் திருப்பலிகள் நடக்கிறது. திருப்பலிகளை பங்குத்தந்தை மரியசூசை, உதவி பங்குத்தந்தை டேவிட் ஆகியோர் நடத்துகிறார்கள்.

சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயம்

திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று இரவு 11.30 மணிக்கு புத்தாண்டு மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. இதை பாதிரியார் விஜயன் நடத்தினார். இதில் திரளானவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு புத்தாண்டு உடன்படிக்கை, திருவிருந்து ஆராதனை, மாலை 6 மணிக்கு புத்தாண்டு ஆராதனை நடக்கிறது.

டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயம்

திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு ஆண்டு நிறைவு திருவிருந்து ஆராதனை, இரவு 11 மணிக்கு ஆண்டு நிறைவு, புத்தாண்டு தொடக்க வழிபாடு, துதி ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் திருச்சபை மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆராதனைகளை சபைகுரு ஸ்டேன்லி தேவகுமார் நடத்தினார். அதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது.

தூய லூக்கா ஆலயம்

இதுபோல் திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பில் உள்ள சி.எஸ்.ஐ. தூய லூக்கா ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஆலயத்தின் ஆயரும் தலைவருமான ரிச்சர்டு துரை கலந்து கொண்டு பழைய, புதிய ஆண்டிற்கான தேவ செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார்.

மேலும் திருப்பூர் ராமையா காலனி சிட்டி ஏ.ஜி. சபையின் புத்தாண்டு ஆராதனை வாலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஜாய் தலைமையில் பாடல் குழுவினர் பாடல் ஆராதனை நடத்தினார்கள். மதுரை தமிழ்நாடு வேதாகம கல்லூரி பேராசிரியர் லின்ட்சே ஜோன்ஸ் சிறப்பு தேவ செய்தி வழங்கினார். சபையின் தலைமை போதகர் பரமானந்தம் ஆசீர்வாத ஜெபம் செய்தார். பிரியா பரமானந்தம் சிறப்பு ஜெபம் செய்தார். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதுபோல் திருப்பூர் குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், முத்தனம்பாளையம் நற்கருணை நாதர் ஆலயம் உள்பட திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story