லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்


லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்
x
தினத்தந்தி 31 Dec 2016 11:15 PM GMT (Updated: 2017-01-01T04:29:36+05:30)

களியக்காவிளை அருகே லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரிசி கடத்தல் குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் மலிவு விலைக்

களியக்காவிளை அருகே லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரிசி கடத்தல்

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும் கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், களிக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு லாரி வேகமாக சென்றது. போலீசார் லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், லாரி நிற்காமல் சோதனை சாவடி தடுப்பை மீறி சென்றது.
உடனே, போலீசார் அந்த லாரியை துரத்தி சென்றனர். சிறிது தூரம் சென்றதும் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர்.

10 டன் ரேஷன் அரிசி

லாரியை போலீசார் சோதனை செய்த போது, அதில் மூடைகளில் 10 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. உடனே, போலீசார் அந்த லாரியை அரிசியுடன் பறிமுதல் செய்து களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

லாரியை ஓட்டிச்சென்ற டிரைவர் மற்றும் கிளனர் ஆகியோரும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லையை சேர்ந்த அய்யன்ராஜ், விளாத்திகுளத்தை சேர்ந்த சின்னத்துரை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story