போலி கையெழுத்து போட்டு ரூ.86 ஆயிரம் கையாடல்


போலி கையெழுத்து போட்டு ரூ.86 ஆயிரம் கையாடல்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 8:56 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது57). அரசு ஒப்பந்ததாரர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

 இவர் 1994–ம் ஆண்டு காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பன்குளம்தாரனேந்தல் சாலை பணியினை மேற்கொண்டார். அதற்கான செலவுத் தொகை ரூ.85ஆயிரத்து 983–க்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரசீது சமர்ப்பித்துள்ளார். பல முறை அலைந்தும் அதற்கான காசோலை வராத நிலையில் தீவிரமாக விசாரித்தபோது, காசோலை போடப்பட்டு அது வங்கியில் பணமாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசில் ராஜாமணி புகார் செய்தார்.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல் துறையினர் 1999–ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த வேலம்மாள், உதவியாளர் தனசேகரன், அலுவலக உதவியாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் காசோலையில் ராஜாமணியின் கையொழுத்தை போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் மூவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, ஓய்வு பெற்றுவிட்ட உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், அலுவலக உதவியாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.


Next Story