அண்ணா சிலைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வளையத்தை அகற்ற கோரி கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுகவனம் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி,
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:– கிருஷ்ணகிரி நகரத்தில் தி.மு.க. சார்பில் 5 ரோடு ரவுண்டானா மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் என 2 இடங்களில் அண்ணாவின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் 2 இடங்களில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைகளுக்கு பாதுகாப்பு வளையம் பொருத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரை இங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைகளுக்கு எந்தவித அவமதிப்பும், சேதமும் ஏற்பட்டதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. அண்ணா அனைத்து கட்சிகளாலும், அனைத்து சாதியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். ஆகவே, அண்ணா சிலைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு வளையத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், சுப்பிரமணி, தலைமை கழக பேச்சாளர் சுப்பிரமணி, சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.