பொங்கல் பண்டிகையையொட்டி வேலூரில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி வேலூரில் கரும்பு, மஞ்சள் குலை விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது

வேலூர்,

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அனைத்து வகை காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் கரும்பும், மஞ்சள் குலையும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

வேலூர் நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகை பின்புறம் உள்பட நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கரும்பு, மஞ்சள் குலைகள், பனங்கிழங்கு போன்றவைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே வரத் தொடங்கிவிட்டன. மேற்கண்ட பொருட்கள் பெரும்பாலும் ரோடுகளின் ஓரங்களிலேயே மொத்தமாகவும், சில்லரை விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கட்டு, கட்டாக...

சேலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 18 அல்லது 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல மஞ்சள் குலை ஜோடி ரூ.20 முதல் ரூ.50 வரையும், 15 பனங்கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.30 முதல் ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலையில் விற்பனையை பொறுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மாற்றம் வரலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

காய்கறி விலை

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று அனைத்து காய்கறிகளும் கிலோ ரூ.20 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டன.

வேலூர் மார்கெட்டில் காய்கறி (1 கிலோ) விலை வருமாறு:–

தக்காளி ரூ.8 முதல் 12 வரையும், உருளைக்கிழங்கு ரூ.15, பீன்ஸ் ரூ.25, அவரை ரூ.40, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.20 முதல் 25 வரையும், கருணைக் கிழங்கு ரூ.30 முதல் 35 வரையும், பூசணிக்காய் ரூ.20 முதல் ரூ.30–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தேங்காய் ஒன்று ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) காய்கறியின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story