அரசு பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதில் தாமதம்
விழுப்புரத்தில் அரசு பஸ் பழுதை சரிசெய்வதில் தாமதமானதால் பயணிகள் திடீரென சாலை மறியல்
விழுப்புரம்,
சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று காலை 11 மணியளவில் புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் மாலை 3 மணியளவில் விழுப்புரம் வந்த போது திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்காக பஸ் டிரைவர் விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் ஓட்டிச்சென்றார்.
சாலை மறியல்இதையடுத்து பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி நடந்தது. மாலை 5.30 மணி ஆகியும் பழுதை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் காத்திருந்த பயணிகள் 5.45 மணிக்கு திடீரென அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் விழுப்புரம்–திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனிடையே பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி முடிந்தவுடன், பணிமனையில் இருந்து பஸ்சை டிரைவர் வெளியே ஓட்டி வந்தார். அதன் பிறகு மாலை 6 மணியளவில் பயணிகள் அனைவரும் மறியலை கைவிட்டு அதே பஸ்சில் ஏறி மதுரைக்கு பயணம் செய்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.