பணப்பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து கூட்டுறவு வங்கியை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட முயற்சி–மறியல்


பணப்பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து கூட்டுறவு வங்கியை பால் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட முயற்சி–மறியல்
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 12 Jan 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் பணப்பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி,

பால் உற்பத்தியாளர்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் உற்பத்தியாளர்களுக்கான பணத்தை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அந்த வங்கிக்கு ஆவின் நிறுவனம் சார்பில் மொத்தமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணத்தை பிரித்து கொடுப்பதில் வங்கி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்

கடந்த 2 மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பால் உற்பத்தியாளர்கள் கேட்ட போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விக்கிரவாண்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் இவர்களது கோரிக்கையை பரிசீலிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

ஊர்வலம்

இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை தங்களது சங்க மாவட்ட தலைவர் ஹரிகரன் தலைமையில் குத்தாம்பூண்டி சாலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து விக்கிரவாண்டி கடை வீதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், பால் உற்பத்தியாளர்களை விக்கிரவாண்டி பஸ்நிலையம் அருகே வந்த போது தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் பால் பணத்தை உடனே வழங்கக்கோரி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

115 பேர் கைது

முற்றுகை போராட்டம் நடத்த தங்களை அனுதிக்குமாறு போலீசாரிடம் பால் உற்பத்தியாளர்கள் கேட்டனர். ஆனால் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர். மேலும் தடையை மீறி ஊர்வலமாக வந்ததாக கூறி 78 பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இதேபோல் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சுமார் 100 பேர், விக்கிரவாண்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், கணக்கில் பால் ஊற்றி வருகின்றனர். இவர்களுக்கும் கடந்த 2 மாதங்களாக பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் சுமார் 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீரென, கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றாமல் பால் கேன்களுடன் தொரவி பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு சென்றனர். திடீரென அவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 மாதங்களாக வழங்க வேண்டிய பால் கொள்முதல் பணத்தை உடனே வழங்கக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். இதன் காரணமாக விழுப்புரம்– திருக்கனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, பால் கொள்முதலுக்குரிய பணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் வங்கி நிர்வாகத்தினரிடம் பேசி உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைஏற்று அனைவரும் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே மறியலில் ஈடுபட்டதாக 100 பேர் மீதும், இதேபோல் விக்கிரவாண்டி தடையை மீறி ஊர்வலமாக வந்து மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சித்ததாக கூறி 120 பேர் மீதும் விக்கிரவாண்டி போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story