பந்தலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மான் சாவு தொழிலாளி படுகாயம்
பந்தலூர் அருகே உள்ள பாலம்வயலை சேர்ந்தவர் சிபு (வயது 37) தொழிலாளி.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ள பாலம்வயலை சேர்ந்தவர் சிபு (வயது 37) தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் முக்கட்டியில் இருந்து பிதிர்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கூடலூர்– சுல்தான்பத்தேரி சாலையின் குறுக்கே ஒரு மான் ஓடி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மான் மீது மோதியது. இதில் மான் படுகாயம் அடைந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிபு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காப்பாளர் ஜார்ஜ் பிரவீன்சன, மோகன்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தது 2 வயதுடைய ஆண் புள்ளி மான் என்பது தெரியவந்தது. பின்னர் பலியான புள்ளிமான் உடலை கால்நடை டாக்டர் காளியப்பன் பரிசோதனை செய்தார். தொடர்ந்து அதன் உடல் அந்த பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து பிதிர்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.