தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி:


தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி:
x
தினத்தந்தி 13 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க நடந்த சதி தொடர்பாக கைது

தர்மபுரி

ரெயிலை கவிழ்க்க சதி

திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த டிசம்பர் மாதம் 23–ந்தேதி நள்ளிரவில் சேலம்–தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் அருகே வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கான்கிரீட் சிலாப்புகளை தண்டவாளத்தில் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்தது.

தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்புகள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கேரளாவில் போலீசாரால் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்க திட்டமிட்டு ரெயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது தெரியவந்தது.

5 நாள் போலீஸ் காவல்

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் ஆலங்கரை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 52) என்ற நக்சலைட் அமைப்பு ஆதரவாளரை தர்மபுரி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சீனிவாசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்ட போலீசார், நேற்று அவரை தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்–1–ல் நேரில் ஆஜர்படுத்தினார்கள்.

இதையடுத்து சீனிவாசனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. வருகிற 16–ந்தேதி மீண்டும் சீனிவாசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி திட்டம் தொடர்பாக போலீசார், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story