கிரானைட் கழிவுகளை முறையாக கையாளாத 12 தொழிற்சாலைகளை மூட கிருஷ்ணகிரி கலெக்டர் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் கழிவுகளை முறையாக கையாளாத 12 தொழிற்சாலைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிரானைட் மெருகேற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திடக்கழிவை முறைப்படி தொழிற்சாலை வளாகத்தில் சேமித்து வைக்கவும், பயனுள்ள பொருட்களாக மாற்றும்படியும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கிரானைட் தொழிற்சாலைகள் இந்த திடக்கழிவுகளை முறையாக பயன்படுத்தாமல் தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொட்டி செல்கின்றனர்.
12 தொழிற்சாலைகள் மூடல்மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட 12 தொழிற்சாலைகளை மூடவும், மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி துப்புகானப்பள்ளி, காமன்தொட்டி 2 தொழிற்சாலைகள், நல்லகானகொத்தப்பள்ளி, குடிமேனஅள்ளி, கண்ணன்டஅள்ளி, மோடிகுப்பம், அகரம், ஜெகதேவி, மல்லப்பாடி, செந்தாரப்பள்ளி, குந்துமாரனப்பள்ளி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இதுபோன்று கிரானைட் நிறுவனங்கள் தொடர்ந்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் பின்பற்றாமல் கிரானைட் கழிவுகளை முறையாக கையாளாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.