சேலத்தில், கார் மோதி ஆட்டோ கவிழ்ந்தது: மாணவ, மாணவிகள் உள்பட 4 பேர் காயம்
சேலத்தில் கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்,
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 62). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். ஆட்டோவில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு செல்வது வழக்கம். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் அவர்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வருவார்.
இந்தநிலையில் நேற்று காலை சீலநாயக்கன்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, சவுடாம்பிகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை, ஆட்டோவில் நாகராஜ் ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தை ஒட்டி திரும்பும் போது அந்த வழியாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது.
4 பேர் காயம்இந்த விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததுடன், புத்தக பை, டிபன் பாக்ஸ் ஆகியவை சாலையில் சிதறியது. அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டனர். இதைக்கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சேலம் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் காயமடைந்த மாணவிகள் சுவேதா (15), நிவேதா (14), மாணவர் கவின் (11), ஆட்டோ டிரைவர் நாகராஜ் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த வசீதரனை (56) பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.