தற்காலிக பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன


தற்காலிக பஸ் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன
x
தினத்தந்தி 13 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

திருச்சி,

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 12-ந் தேதி(நேற்று) முதல் 18-ந் தேதி வரை 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி திருச்சி மன்னார்புரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையத்தில், பஸ் போக்குவரத்தை நேற்று காலை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் ஆறுமுகம், கோட்ட மேலாளர் வேலுச்சாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்பட உள்ளன. தஞ்சை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்பட உள்ளன.

மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்படும் இடங்களில் எந்தவித மாற்றமும் இன்றி, வழக்கம் போல மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

பயணிகள் கூட்டம்

மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்துக்கு நகர சுற்று பஸ்கள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு போலீசாரின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக்கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று காலை முதலே தற்காலிக பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பலர் மன்னார்புரம், சோனா-மீனா தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பஸ்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

Next Story