அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை மாணவ, மாணவிகள் முற்றுகை


அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை மாணவ, மாணவிகள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி திருவட்டார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவட்டார்,

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

பஸ் நிறுத்தம்

மண்டைக்காட்டில் இருந்து ஒரு அரசு பஸ் திங்கள்சந்தை, அழகிய மண்டபம், வேர்கிளம்பி, ஆற்றூர் வழியாக கடையாலூமூட்டிற்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு பயன்படும் வகையில் தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இயங்கி வந்தது. இதில் மண்டைக்காடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வழக்கமாக சென்று வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள். அடுத்த பஸ்சில் மாணவ, மாணவிகள் மிகுந்த கூட்ட நெருக்கடியில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பஸ் வராததால், 5.30 மணி பஸ்சில் மாணவ, மாணவிகள் கூட்ட நெருக்கடியில் படிக்கட்டில் தொங்கி சென்றனர்.

மாணவர்கள் போராட்டம்

இதில் கல்லூரி மாணவர் சுஜீன் (வயது 19) என்பவர், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை ஆற்றூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பணிமனை வாசலில் அமர்ந்து முறையாக பஸ் இயக்காத அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பரபரப்பு

இதன் காரணமாக பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் மாணவ–மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை முதல் (இன்று) நிறுத்தப்பட்ட பஸ் வழக்கம் போல் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் நேற்று மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு வசதியாக உடனடியாக பஸ்சும் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ–மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர். அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story