பொதுக்கூட்டம், பல்வேறு போட்டிகள் நடத்தி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்
பொதுக்கூட்டம், பல்வேறு போட்டிகள் நடத்தி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மெய்க்கப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம் வரவேற்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு, விவசாய பிரிவு தலைவர் துரை.கோவிந்தராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி எம்.எல்.ஏ., பரசுராமன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர், கோவிந்தராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன் ஆகியோர் பேசினர். முன்னதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1½ கோடி தொண்டர்களின் வற்புறுத்தலை ஏற்று, அ.தி.மு.க.வை வழிநடத்திட பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறோம். அ.தி.மு.க.வின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடத்துவது, நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததானம், மாணவ–மாணவிகளுக்கு கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பொதுச் செயலாளர் சசிகலாவின் கையால் பரிசு வழங்கப்படும்.
தமிழகஅரசுக்கு பாராட்டுஒவ்வொரு கிளைகளிலும் அ.தி.மு.க. கொடியை ஏற்றி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். வறட்சியால் நெற்பயிர்கள் கருகி, விவசாயிகள் படும் வேதனையை தமிழகஅரசு அறிந்த காரணத்தினால் மாவட்டம்தோறும் அமைச்சர்களை அனுப்பி வறட்சியை பார்வையிட செய்து, அறிக்கை கேட்டதோடு மட்டுமின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவித்த தமிழகஅரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். சட்டத்தை மதிக்காமல் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகஅரசை கண்டிப்பதுடன், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு உடனே அமைக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்–அமைச்சராக பொறுப்பேற்று ஆட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். எம்.ஜி.ஆருக்கு மத்தியஅரசு தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் தங்கப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேகர், விவசாயப்பிரிவு செயலாளர் சாமிஅய்யா, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பகுதி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.