தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்
பொங்கல் பண்டிகையையொட்டி தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கலாம் என்று நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்,
இதுகுறித்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவார்கள். அவ்வாறு வாங்கும்போது தரமாக உள்ளதா என்றும், உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து உரிமம் அல்லது பதிவு சான்று பெற்றுள்ள உணவு நிறுவனத்திடம் மட்டும் உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் பொங்கலுக்கு விற்பனையாகும் கரும்பு விவசாய நிலங்களில் இருந்து நேரடியாக விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு அசுத்தங்கள் கரும்பின்மேல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமா உள்ளது. எனவே கரும்பை பயன்படுத்துவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்பொங்கல் தயாரிக்க பயன்படும் வெல்லத்தில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் நெய்யும் கலப்படமாக, தரமற்றதாக, அக்மார்க் முத்திரையற்றதாக அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரமான வெல்லம், நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றை பார்த்து, உரிய உரிமம் பெற்ற பொருட்களை பார்த்து வாங்க வேண்டும். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொங்கலுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலப்படம், தரமற்ற பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரியை 9442214055 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புகார்கள் தெரிவிக்கப்பட்டால் அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011–ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.