மும்பை மாநகராட்சியின் கல்வி, மேம்பாட்டு குழுவில் ரூ.2 லட்சம் கோடி ஊழல் தேசியவாத காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை மாநகராட்சியின் கல்வி மற்றும் மேம்பாட்டு குழுவில் ரூ.2 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மும்பை மாநகராட்சியில் கடந்த 22 ஆண்டுகால சிவசேனா– பாரதீய ஜனதா ஆளுகையின்கீழ் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக பா.ஜனதா வசம் இருந்த கல்வி மற்றும் மேம்பாட்டு குழு, நகரின் பிரதான பகுதிகளில் உள்ள பொது நிலத்தை கட்டுமான அதிபர்களுக்கு தாரை வார்த்து ஊழல் புரிந்துவிட்டது.
சமீபத்தில் கூட மும்பை பா.ஜனதா தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆசிஷ் ஷெலாரின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதாவது பாந்திரா எல்கா மார்க்கெட் பகுதியில் உள்ள நிலம் ‘தடை செய்யப்பட்டது’ என்ற நிலைப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. அது சுமார் 3 முதல் 4 ஆயிரம் சதுர மீட்டர் கொண்டது. அதிலும், முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.
ஆசிஷ் ஷெலார் பதிலடிஇந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ஆசிஷ் ஷெலார், ‘‘நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. முறைகேடுகள் பற்றிய தகவல்களை மறைப்பது கூட குற்றம் தான். ஆகையால், நவாப் மாலிக் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
மும்பை மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 21–ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசியவாத காங்கிரசின் இந்த ஊழல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.