பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலர் ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாஸ்கரன், போஸ், குணசுந்தரி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அரசு அலுவலர்களுக்கு 7–வது ஊதியக்குழு ஊதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழு இடைக்கால நிவாரணமாக 50 சதவீதம் உடனடியாக அறிவித்திடுமாறு முதல்–அமைச்சரை கேட்டு கொள்வது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களுக்கு என திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனி வரிசை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலமுறை ஊதியம்மாவட்ட கலெக்டர் தலைமையிலான அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டு மன்ற கூட்டம் நடைபெற ஆவண செய்ய கலெக்டரை கேட்டு கொள்வது. அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு முழு நேர அரசு அலுவலராக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பட்டப்படிப்பு முடித்து பணியில் சேரும் பணியாளர்களுக்கு ஏற்கனவே உள்ளதை போன்று ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட இணைச்செயலாளர்கள் விக்டர்ராஜ், புண்ணியமூர்த்தி, கமலக்கண்ணன், முகமதுரபீக், வள்ளியம்மை, மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ்பாட்சா, மாவட்ட பிரசார செயலாளர் மாரியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் உஷாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் எட்வர்டு நன்றி கூறினார்.