வீட்டின் பூட்டை உடைத்து 11½ பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குடவாசல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11½ பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள காப்பணாமங்கலம் உப்புக்கடைத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 63). இவர் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், தனது மனைவியையும் அழைத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 8–ந்தேதி சென்றுள்ளார். பின்னர் 10–ந்தேதி முத்துசாமி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11½ பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்துசாமி குடவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.