‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட காணும் பொங்கலுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு இல்லை


‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட காணும் பொங்கலுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு இல்லை
x
தினத்தந்தி 13 Jan 2017 5:24 AM IST (Updated: 13 Jan 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்கு திறக்கப்படாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வண்டலூர்

‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்கு திறக்கப்படாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மரங்கள் சாய்ந்து விழுந்தன

பொங்கல் பண்டிகை மற்றும் காணும் பொங்கலையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த மாதம் 12–ந்தேதி வீசிய ‘வார்தா’ புயலினால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

பார்வையாளர்கள் நடந்து செல்லும் பகுதி, விலங்குகளின் இருப்பிடங்களில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் மற்றும் விலங்குகள் இருப்பிடங்களை சீர்செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வெட்டப்பட்ட மரக்கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை.

32 ஆண்டுகளுக்கு பிறகு

மேலும், பார்வையாளர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. புயல் தாக்கி ஒரு மாதம் ஆகியும் பூங்காவை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் காணும் பொங்கலுக்கு பூங்காவை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவை 1985–ம் ஆண்டு மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அன்று முதல் கடந்த ஆண்டு வரை தொடர்ந்து பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்கு பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு பூங்கா திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கோரிக்கை

நேற்று காலை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீரென பூங்காவில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து பூங்காவை விரைவில் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்கு பூங்கா திறக்கப்படாது. எனவே பொதுமக்கள் பூங்காவை பார்க்க வந்து ஏமாந்து செல்ல வேண்டாம் என பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா செல்லலாம் என நினைத்து இருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பூங்காவை விரைவாக சீரமைத்து 26–ந்தேதி குடியரசு தினத்திலாவது திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story