பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நடிகை திரிஷாவை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்


பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நடிகை திரிஷாவை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:30 AM IST (Updated: 13 Jan 2017 6:27 PM IST)
t-max-icont-min-icon

பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் நடிகை திரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு

காரைக்குடி,

திரிஷா படப்பிடிப்பு

புதுமுக இயக்குநர் சுந்தர் என்பவர் கர்ஜனை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். புதுமுக நடிகர் அமித்பார்க்கவ், நடிகைகள் கிருஷ்ணவம்சி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 6–ந் தேதியில் இருந்து காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியில் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு ஆதரவாகவும் நடிகை திரிஷா செயல்படுவது பற்றி, சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. இந்தநிலையில் நடிகை திரிஷா நடிக்கும் படத்தின் படப்படிப்பு நடந்து வருவதை கேள்விப்பட்ட காரைக்குடி மக்கள் மன்றத்தினர், நாம் தமிழர் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், தமிழர் தேசிய முன்னணியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என 50–க்கும் மேற்பட்டவர்கள் நேமத்தான்பட்டியில் நேற்று திரண்டனர்.

‘வெளியேறு‘

அவர்கள், அங்கு நின்று கொண்டிருந்த கேரவன் வேன் முன்பு நின்று கொண்டு பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் திரிஷாவே தமிழகத்தை விட்டு வெளியேறு என்று கோ‌ஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, நடிகை திரிஷா படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், மற்ற நடிகர்–நடிகைகள் மட்டுமே படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு கேரவன் வேன் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. படப்பிடிப்புக்குழுவினரும் அங்கிருந்து சென்றனர். இதன்பின்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நடிகை திரிஷாவுக்கு எதிராக படப்பிடிப்பு தளத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story