கூடங்குளம் 2–வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது


கூடங்குளம் 2–வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது
x
தினத்தந்தி 14 Jan 2017 1:30 AM IST (Updated: 13 Jan 2017 8:46 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2–வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கு, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது.

வள்ளியூர்,

கூடங்குளம் 2–வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கு, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது.

கூடங்குளம் அணுஉலை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2–வது அணுஉலையில் கடந்த ஜூலை மாதம் 10–ந் தேதி கிரிட்டிகாலிட்டி என்ற தொடர் அணுப்பிளவு நிகழ்வு நடந்தது. அதன் பின்னர் ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி டர்பன் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. படிப்படியாக 250 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இதுதொடர்பாக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 500 மெகாவாட் மின்உற்பத்தியும், பின்னர் அதில் இருந்து 750 மெகாவாட் மின்உற்பத்திக்கும் அனுமதி அளித்தது. அதன்படி 750 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்திக்கு அனுமதி

டிசம்பர் 17–ந் தேதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, 750 மெகாவாட் மின்உற்பத்தியில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் நேற்று மாலை அனுமதி வழங்கியது. அதன்படி இன்னும் ஒரு சில நாட்களில் 2–வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது.

முதல் அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த நவம்பர் மாதம் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து ஒரு சில வாரங்களில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும். பின்னர் வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு, யுரேனியம் நிரப்பும் பணிகள் நடைபெறும். அதன் பின்னர் மின்உற்பத்தி தொடங்கும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய வட்டார நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story