நெல்லிக்குப்பத்தில் கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பத்தில் நிலுவைத்தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பம்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளில் கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.120 கோடியை வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் அரியூர் கரும்பை நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் அரவை செய்யக்கூடாது, சர்க்கரை ஆலையில் கரும்பு எடை மோசடியை தடுக்க அரசே எடை மேடை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.
கருப்புக் கொடி ஏந்தி...ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நெல்லிக்குப்பம் நகர தலைவர் தென்னரசு, செயலாளர் தேவநாதன், துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஆதவன், கண்ணன், தேவநாதன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.