கடலூர் அருகே கோர விபத்து: கார்–லாரி நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி


கடலூர் அருகே கோர விபத்து: கார்–லாரி நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2017 4:45 AM IST (Updated: 13 Jan 2017 9:31 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே நடந்த விபத்தில் கார், லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரெட்டிச்சாவடி,

வெளிநாட்டில் வேலை

நாகை மாவட்டம் நாகூர் மைதின் பள்ளி தெருவை சேர்ந்தவர் உமர்நைனா மரைக்காயர். இவரது மனைவி ஜான்முகமது நாச்சியார்(வயது 55). இவர்களது மகனுக்கு பங்களாதேசத்தில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை வழி அனுப்பி வைக்க அவரது தாய் ஜான் முகமது நாச்சியார் ஒருகாரில் நேற்று முன்தினம் சென்னை சென்றார். அப்போது அவருடன் உறவினர்கள் நபுஜெயாலுதீன் மகன் தன்வீர் மதார்(25), ரபிக் அகமது மகன் ரிபாக் அகமது(11), முகமது அபுபக்கர் மகன் ரகுமான்(28) ஆகியோரும் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஜான்முகமது நாச்சியார் தனது மகனை விமானத்தில் வழியனுப்பி வைத்து விட்டு, அதிகாலை 2 காலை மணிக்கு சொந்த ஊருக்கு மீண்டும் அதே காரில் புறப்பட்டனர். காரை ரகுமான் ஓட்டி வந்தார்.

கார்–லாரி மோதல்

காலை 6.50 மணிக்கு கடலூர் அருகே உள்ள சின்னகங்காணாங்குப்பம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த நிலையில் காரும், லாரியும் அருகருகே வந்த போது எதிர்பாராதவிதமாக இவை இரண்டும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரியின் அடிப்பகுதிக்குள் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் விபத்தில் சிக்கியவவர்கள் மரண ஓலம் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் விபத்து பற்றி அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரபாலன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் பலி

இதில் காரின் முன்பகுதி லாரிக்கு அடிப்பகுதியில் சிக்கி கொண்டதால் ரகுமானை மீட்டு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் படுகாயமடைந்த ஜான்முகமது நாச்சியார், ரிபாக் அககமது, தன்வீர்மதார் ஆகியோரை இடிபாட்டிற்குள் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே காரின் இடிபாட்டிற்குள் சிக்கியிருந்த ரகுமானை மீட்கும் வகையில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அதன் உதவியுடன் காரை வெளியே எடுத்து, பின்னர் ரகுமானை போலீசார் மீட்டனர். அப்போது தான் அவர் ஏற்கனவே உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள பிணவறையில் இவர்களது 4 பேரின் உடலும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து பற்றி பலியானவர்களின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அவர்கள் அங்கு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த இவர்களது உடலை பார்த்து கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.

போலீஸ் விசாரணை

இந்நிலையில் விபத்தில் சிக்கிய கார் மற்றும் லாரி ஆகியவற்றை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் கடலூர்–புதுச்சேரி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. பொக்லைன் எந்திரம் மூலம் கார், லாரியை போலீசார் அப்புறப்படுத்தியதை அடுத்து போக்குவரத்து தொடங்கியது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story