மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை


மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 9:48 PM IST)
t-max-icont-min-icon

மின் மோட்டார்கள் மூலமாக குடிநீரை எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கிருஷ்ணகிரி,

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வது குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீரை சீராக வழங்குவது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து குடிநீர் தொடர்பாக புகார்கள் தொலைபேசி மூலமாகவோ, கடிதமாகவோ வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் உடனடியாக அந்த புகாரை பதிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எந்தவித தொய்வும் இருக்க கூடாது. எந்த இடத்திலும் குடிநீர் குறித்து பிரச்சினைகள் வராத வகையில் பணியாற்றிட வேண்டும். நீர்ஆதாரம் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

மேலும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சரி செய்திட வேண்டும். முறையாக இணைப்பு பெறாத வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் எடுக்கும் நபர்கள் மீதும், குழாய்களை உடைத்து சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் முத்துசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) சீனிவாசன், உதவி இயக்குனர் (தணிக்கை) லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story