நாகர்கோவிலில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜல்லிக்கட்டுதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கடந்த ஓராண்டு காலமாக மத்திய, மாநில அரசுகளிடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விரைந்து மேற்கொள்ள வேண்டும்ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தரப்படும் என்று தொடர்ந்து நமது மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குரல் கொடுத்து வந்தார். மாநில அரசு கடந்த ஒரு ஆண்டு காலமாக அமைதியாக இருந்துவிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்களை டெல்லியில் மனு கொடுக்கச் செய்துள்ளது.
தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிற, தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கு மதிப்பளிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளோம். வரும் காலங்களிலாவது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
அலங்கரிக்கப்பட்ட காளைமாடுஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின், நகர செயலாளர் வக்கீல் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் கேட்சன், ரா.பெர்னார்டு, தில்லைச் செல்வம், ஹெலன் டேவிட்சன், எம்.ஜே.ராஜன், சற்குரு கண்ணன், ஷேக்தாவூது, சிவராஜ், குமரி ஸ்டீபன், எப்.எம்.ராஜரத்தினம், வக்கீல் உதயகுமார், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை நினைவுபடுத்தும் விதமாக மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காளைமாடு ஒன்றும் கொண்டுவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.