ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:15 AM IST (Updated: 13 Jan 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகள் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஜல்லிக்கட்டு நடத்திட உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, மாவட்ட துணைத்தலைவர்கள் கார்த்திக், கலைவாணி. மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாக்குவாதம்

முன்னதாக போலீசாரின் தடையை மீறி ரேக்களா குதிரை வண்டியில் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமையில், தி.மு.க. வினர் தண்டலை என்ற இடத்தில் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் காளை மாடு, குதிரை, சண்டை சேவல்களுடன் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பாலசந்திரன், சேகர் கலியபெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுப்பான்மை நலப்பிரிவு அமைப்பாளர் தாஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம்தேவா நன்றி கூறினார்.

Next Story