தகட்டூர் அரசு பள்ளியில் 370 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
தகட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் 370 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
வாய்மேடு,
நாகை மாவட்டம் தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தகட்டூர், சரபோஜிராஜபுரம், பஞ்சநதிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 370 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சத்து 37 ஆயிரத்து 50 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் முதல் 14 வகையான உபகரணங்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. அதே போல் மாணவ, மாணவிகள் வெகு தூரம் நடந்து சென்று கல்வி கற்கும் சிரமத்தை போக்குவதற்காக அவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
கூடுதல் பஸ் இயக்கம்நாகை மாவட்டத்தில் 2015–2016–ம் கல்வி ஆண்டில் 14 ஆயிரத்து 656 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 கோடியே 45 லட்சத்து 59 ஆயிரத்து 752 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 2016–2017–ம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான சைக்கிள்கள் தலா ரூ.3 ஆயிரத்து 917 மதிப்பில் 6 ஆயிரத்து 176 சைக்கிள்களும், மாணவிகளுக்கான சைக்கிள் தலா ரூ.3 ஆயிரத்து 827 மதிப்பில் 8 ஆயிரத்து 898 சைக்கிள்களும் மொத்தம் 15 ஆயிரத்து 74 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரத்து 38 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. எனவே மாணவ, மாணவிகள் தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் காலை சிறப்பு வகுப்புகளுக்கு வந்து சேரவும், மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் முடிந்து விரைவாக வீடு திரும்பும் வகையில் வேதாரண்யம் – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்கத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் வேதரத்தினம், உதவி கலெக்டர் கண்ணன், தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தகடேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கோவிந்தசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், சிவானந்தம், ராதாகிருஷ்ணன், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டான். முடிவில் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பூமிநாதன் நன்றி கூறினார்.