ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 13 Jan 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 19–ந்தேதி ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு,

ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவஹருல்லா கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடத்த குறுகிய கால அவகாசமே உள்ளது. இதற்கான அனுமதியை சுப்ரீம் கோர்ட்டு அளிக்காத நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநில அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு ஜல்லிக்கட்டை ஏதாவது ஒரு வகையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதை விடுத்து ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும். மேலும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதே போல் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5,400 வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவே ரூ.25 ஆயிரம் வரை ஆகிறது. எனவே விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டுவில் சிறந்த பள்ளி என்ற சிறப்பை பெற்ற அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது அதன் சிறப்பை இழந்துள்ளது. இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

வருகிற 17–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 19–ந்தேதி தஞ்சாவூரில் மனித நேயமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.


Next Story