மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டதால், அதன்பின்னர் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காத்திருந்தனர்.
இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு நடைபெறும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரியும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் பங்கேற்றனர்.
இளைஞர்கள்திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு இளைஞர்கள், மாணவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பீட்டா அமைப்பினர் உடையாடுவது போன்று வீதி நாடகத்தையும் நடத்தினர். பின்னர் அங்கிருந்து காளைகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
மேலும் திண்டுக்கல் கல்லறை மேடு அருகே ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும், மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் சிம்பு ரசிகர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி ஊர்வலம் நடந்தது. இதில் நடிகர் சிம்பு ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காளைகளை அவிழ்த்து விட்டனர்நத்தம் அருகே சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோவில் முன்பு காளைகளுடன் வந்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் காளைகளுடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நத்தத்தில் ஒன்றிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஊர்வலம் நடந்தது. இதில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர்கள், நாம்தமிழர் கட்சியினர், அஜித், விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நத்தம் அம்மன்குளத்தில் தொடங்கிய ஊர்வலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நிலக்கோட்டைநிலக்கோட்டையில் பாரதிய பார்வார்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பசும்பொன் முத்தையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு கிருஷணாபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பாக வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் பழையவத்தலக்குண்டு பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. மற்றும் மள்ளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடிகர் சிம்பு ரசிகர்கள் மவுன போராட்டம் நடத்தினர்.