விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு
விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியரிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வழுதரெட்டி சுப்பிரமணியசாமி நகரை சேர்ந்தவர் சுப்புராயன். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக (கேபிள் டி.வி.) பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாலா (வயது 40). இவர் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வீட்டு அருகே எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாலாவை கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். உடனே மாலா, திருடன்... திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கு ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.