ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஊட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஊட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஊட்டியில் நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டால் காளைகள் பாதிக்கப்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி பல்வேறு அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வலுத்து வருகிறது.

தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், திராவிடமணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story