வாழை மரங்களை தாக்கும் வாடல் நோய் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கூடலூர் பகுதியில் நேந்திர வாழை மரங்களை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் நேந்திர வாழை மரங்களை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் ஏற்படும் இழப்புகளை சரிகட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வறட்சியால் கருகும் பயிர்கள்கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நெல் விவசாயம் களை கட்டுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் கைவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயத்தில் கவனம் செலுத்த வில்லை.இதனால் நெல் நடவு செய்யும் விவசாய நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக மாறி விட்டன.
இதனிடையே விவசாயிகள் பலர் நேந்திர வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்த அளவு ஈரப்பதம் இருந்தாலும் விளையும் தன்மை உடைய நேந்திர வாழை மரங்கள் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வாழை விவசாயத்தை பாதிக்கக்கூடிய சூழலும் உருவாகி உள்ளது.
வாழை மரங்களை தாக்கும் வாடல் நோய்கூடலூர் பாண்டியாறு குடோன் பகுதியின் அருகே முன்டக்குன்னு ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நெல், வாழை விவசாயத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை இப்பகுதி ஆதிவாசி மக்கள் கழித்து வருகின்றனர். போதிய மழை இல்லாததால் நடப்பு ஆண்டில் நெல் விவசாயத்தை ஆதிவாசி விவசாயிகள் கைவிட்டு நேந்திர வாழை மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் அப்பகுதியில் பயிரிடப்பட்டது. இந்த நிலையில் வாழை மரங்களை வாடல் நோய் தாக்கி வருகிறது. வாழை தண்டுகளின் அடிப்பாகம் கருப்பு நிறத்துக்கு மாறி இலைகள் கருகி வருகின்றன. இந்த வாடல் நோயை தடுக்க ஆதிவாசி மக்கள் மருந்துகளை பயன்படுத்தினர். இருப்பினும் நோய் கட்டுப்பட வில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் வாழை மரங்கள் கருகும் சூழ்நிலையில் உள்ளது.
நிவாரணம் வழங்க கோரிக்கைஇது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–
ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்து மருந்து அடித்தும் வாழை மரங்களில் வாடல் நோய் கட்டுப்பட வில்லை. மேலும் ஒரு வாழைக்கு ரூ.150 வரை செலவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நோய் தாக்கத்தால் வாழை விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.