பொங்கல் பண்டிகையையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


பொங்கல் பண்டிகையையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 14 Jan 2017 3:45 AM IST (Updated: 14 Jan 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளியூருக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

தொழில் நகரமான கோவையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் தங் கள் குடும்பத்துடன் கோவையில் தங்கி உள்ளனர். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவையில் தங்கி இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். பொதுமக்களின் வசதிக்காக கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கூட்டம் அலைமோதியது

அதன்படி நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கோவையில் உள்ள பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளதால், பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்ததும் அதில் பயணிகள் முண்டியடித்து ஏறினார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை வரிசைப்படுத்தி பஸ்களில் ஏற செய்தனர்.

போலீசார் சோதனை

அதுபோன்று கோவை ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயிலில் முன்பதிவு டிக்கெட் ஏற்கனவே முடிந்துவிட்டதால், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலைய முன்பகுதி மற்றும் பின்பகுதியில் உள்ள வாசல்களில் கூடுதலாக டிக்கெட் விற்பனை மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளின் பொருட்களையும் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். குறிப்பாக சென்னை மற்றும் நாகர்கோவில் செல்லும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மோப்ப நாய்

அதுபோன்று போத்தனூர் ரெயில் நிலையத்திலும் கேரளா செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ரெயில்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலை யத்திலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு அவர்கள் ரோந்து சுற்றி வந்தனர்.

அதுபோன்று ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். ரெயிலில் பார்சலில் சென்ற அனைத்து பொருட்களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுப்பி வைத்தனர்.


Next Story