தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்


தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 24 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு, புறவழிச்சாலையில் உள்ள உடுமலை ரவுண்டானா பகுதியில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் “நகராட்சி அதிகாரிகள் வந்து உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஊறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம்“ என்றனர். அதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் குடிநீர் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலை மறியல் குறித்து காந்திநகரைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது “ எங்கள் பகுதிக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் நகராட்சியிலிருந்து குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை.

இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கி உபயோகித்து வருகிறோம். எத்தனை நாளைக்கு குடிநீரை இப்படியே விலை கொடுத்து வாங்க முடியும்.

எனவே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வழங்கக்கேட்டும் சாலை மறியலில் போராட்டத்தை நடத்தினோம்“ என்றனர். 

Next Story