சேலம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம்


சேலம் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:30 AM IST (Updated: 14 Jan 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயம்

சேலம்,

மோட்டார் சைக்கிள் மீது மோதியது

சேலத்தில் இருந்து கடத்தூரை நோக்கி நேற்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவர் ஓட்டினார். சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி கோமாளி வட்டம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லதுரை (25), சிவா (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த லாரி வழிமறித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் லாரியின் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர்.

டிரைவர் மீது தாக்குதல்

மேலும் லாரி டிரைவரான மகேந்திரனையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த செல்லதுரை, சிவா ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

6 பேர் கைது

இதனிடையே, லாரி டிரைவர் மகேந்திரனை தாக்கியதாகவும், மேலும், அவரது லாரியை கற்கள் வீசி கண்ணாடியை உடைத்தது தொடர்பாக சுக்கம்பட்டி காந்திநகரை சேர்ந்த அருள்முருகன் (28), நடேசன் (27), முனியப்பன் (29), வைரவேல் (42), குமார் (31), பழனி (54) ஆகிய 6 பேரை வீராணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story