பொன்னேரி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசம்


பொன்னேரி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள் உதிரிபாகங்கள் தீயில் எரிந்து நாசமானது.

600 சைக்கிள்கள்

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. மின்வசதி இல்லாத அந்த கிடங்கின் 2 அறைகளில் 600 சைக்கிள்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருந்தன.

இந்த சைக்கிள்களின் டயர், பிரேம், சக்கரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதனால் எழுந்த புகை மூட்டத்தைக்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் ஜாவித் பொன்னேரி போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சமூக விரோதிகள் காரணமா?

இதற்கிடையே தீ விபத்து குறித்த தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கெங்காதரன், முதன்மைகல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விலையில்லா சைக்கிள் உதிரிபாகங்களின் ஒப்பந்ததாரரான பூந்தமல்லியை சேர்ந்த ஜெய்சங்கரும் அங்கு விரைந்து வந்து விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் தீயில் எரிந்து நாசமானதை பார்த்தார்.

இந்த சம்பவத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான சைக்கிள் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்துக்கு சமூக விரோதிகள் யாரும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.


Next Story