எண்ணூரில் நிவாரண தொகை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
எண்ணூரில், புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண தொகை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
‘வார்தா’ புயலில் சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு சிலருக்கு மட்டும் அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிவாரண தொகை கிடைக்கப்பெறாத பொதுமக்கள், தங்களுக்கு நிவாரணம் கேட்டு வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு நிவாரணம் கேட்டு நேற்று காலை எண்ணூர் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.