காதலிக்க கூறி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் பெங்களூரு கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை


காதலிக்க கூறி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் பெங்களூரு கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2017 3:26 AM IST (Updated: 14 Jan 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க கூறி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் தனியார் கல்லூரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு,

காதலிக்க கூறி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த பெங்களூரு தனியார் கல்லூரியில் படித்து வந்த ஒரு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பெங்களூரு கல்லூரி மாணவி

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா மக்கேஹள்ளியைச் சேர்ந்தவர் சுஷ்மிதா(வயது 22). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்று வருவதற்கு வசதியாக அவர் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அதே கல்லூரியில் பி.காம் படித்து வந்த ஒரு வாலிபருடன் நட்பாக பழகி வந்தார். அந்த மாணவரும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில், சுஷ்மிதாவை அந்த மாணவர் ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவர், சுஷ்மிதாவிடம் தெரிவித்தார். அப்போது சுஷ்மிதா காதலுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் அந்த மாணவரை கண்டித்தார். இதனால் அந்த மாணவர் தொடர்ந்து சுஷ்மிதாவுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

மிரட்டல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஷ்மிதாவை சந்தித்த அந்த மாணவர், தன்னை காதலிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொள்வேன் என்றும் சுஷ்மிதாவிடம் கூறி மிரட்டினார். இதனால் மனமுடைந்த சுஷ்மிதா கல்லூரியில் மக்கேனஹள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

அங்கு பெற்றோரை சந்தித்து தனக்கு மிரட்டல் விடுத்த அந்த வாலிபர் குறித்து கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், போலீசாரிடமும் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் அந்த மாணவர் தன்னை மிரட்டியதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்த சுஷ்மிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த ஆலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னை காதலிக்கக்கூறி வாலிபர் மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story