கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலை; அரசு பெண் அதிகாரி தற்கொலை


கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலை; அரசு பெண் அதிகாரி தற்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்

பெங்களூரு

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவருடைய கள்ளக்காதலியான அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்டார். கள்ளக்காதலியின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளத்தொடர்பு

பெங்களூரு புறநகர் நெலமங்களாவை சேர்ந்தவர் கேசவமூர்த்தி. வக்கீல். இவருடைய மகன் அமித். இவரும் வக்கீல் ஆவார். திருமணமான இருவருக்கும் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்ருதி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஸ்ருதிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

இவருடைய கணவர் ராஜேஷ். இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த நிலையில் அவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் ராஜேசுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனைவி ஸ்ருதியை கண்டித்துள்ளார். மேலும் ஸ்ருதியை அவரும், உறவினராக கோபால கிருஷ்ணா என்பவரும் கண்காணித்து வந்தனர்.

வக்கீல் சுட்டுக்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை சோழதேவனஹள்ளி பகுதியில் ஸ்ருதியும், அமித்தும் ஒரு காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராஜேசும், கோபால கிருஷ்ணாவும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அமித்தின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமித்தை, ஸ்ருதி அதே காரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த ஸ்ருதி, யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஸ்ருதி, அந்தப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ருதியின் கணவர் ராஜேஷ், அவருடைய உறவினர் கோபால கிருஷ்ணா ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story