பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் கைது
பெங்களூரு பானசவாடி அருகே வசித்து வரும் ராணி என்பவருக்கு 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு
பெங்களூரு பானசவாடி அருகே வசித்து வருபவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ராணி, கடந்த 4–ந் தேதி இரவு பாபுசாப் பாளையா பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு ஸ்கூட்டரில் வந்த 2 பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இதுகுறித்து பானசவாடி போலீசில் ராணி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 2 பேரையும் பானசவாடி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த நந்தா என்ற அமின்(வயது 23), கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த முபாரக் (25) என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.