பா.ஜனதாவில் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக குரல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எடியூரப்பாவுக்கு நிர்வாகிகள் பகிரங்க கடிதம்


பா.ஜனதாவில் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக குரல் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எடியூரப்பாவுக்கு நிர்வாகிகள் பகிரங்க கடிதம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:56 AM IST (Updated: 14 Jan 2017 3:56 AM IST)
t-max-icont-min-icon

ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எடியூரப்பாவுக்கு கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக கடிதம். இதனால் பா.ஜனதாவில் ஈசவரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது.

பெங்களூரு,

ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எடியூரப்பாவுக்கு கட்சி நிர்வாகிகள் பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர். இதன் மூலம் பா.ஜனதாவில் ஈசவரப்பாவுக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது.

கருத்து வேறுபாடு முற்றியுள்ளது

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு தொடர்பாக பா.ஜனதா கட்சியில் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கும், மூத்த தலைவர் ஈசுவரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் பொதுச் செயலாளரான முன்னாள் மேயர் வெங்கடேசமூர்த்தி பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பா.ஜனதாவை விட்டு ஈசுவரப்பா நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக கட்சியில் குரல் எழுந்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:–

ஈசுவரப்பாவை புறக்கணித்தது ஏன்?

நீங்கள் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் பணியை செய்வீர்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தபோது எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் தன்னிச்சையாக, ஒருதலைபட்சமாக செயல்பட்டீர்கள். மாநில செய்தித்தொடர்பாளர்கள், இதர பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கவில்லை.

புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு மாவட்டங்களில் 2 கோஷ்டிகள் உருவாகியுள்ளன. ஒருவருடைய முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் கட்சியை பலப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் வறட்சியை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் மேல்–சபை எதிர்க்கட்சி தலைவராகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் முக்கிய தலைவராகவும் விளங்கும் ஈசுவரப்பாவை புறக்கணித்தது ஏன்?.

பதவி வழங்க வேண்டும்

கட்சியின் இந்த முடிவு தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை மறுபரிசீலனை செய்து, கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story