என்ன நடந்தாலும் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன் ஈசுவரப்பா உருக்கம்


என்ன நடந்தாலும் பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன்  ஈசுவரப்பா உருக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:02 AM IST (Updated: 14 Jan 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

என்ன நடந்தாலும் பா.ஜனதா கட்சியை விட்டு விலக மாட்டேன் என்று ஈசுவரப்பா கூறியுள்ளார்.

சிவமொக்கா,

மாநாடு நடப்பதில் சந்தேகமில்லை

சிவமொக்காவில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மேல்–சபை எதிர்கட்சி தலைவருமான ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் அனந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத் ஜோஷி ஆகியவர்கள் அவரவர் இனம், சாதியின் மீது பற்று கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்று தான், நானும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை தொடங்கி தலித், பிற்படுத்தப்பட்டோர் மக்கள் நலனுக்காக மாநாடு நடத்த உள்ளேன். ஆனால் இந்த மாநாட்டில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த யாரும் கலந்து கொள்ள கூடாது என்று எடியூரப்பா கூறி வருகிறார். அவர் இப்படி கூறி வருவது சரியல்ல.

கூடலசங்கமத்தில் திட்டமிட்டப்படி சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் மாநாடு நடக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டை நடக்காமல் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மாநிலத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பா.ஜனதா குழுவில் என் பெயர் வேண்டுமென்றே கைவிடப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் வறட்சி குறித்து ஆய்வு செய்வது பற்றி எனக்கு தாமதமாக தான் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட வறட்சி ஆய்வு குழுவில் எனது பெயர் இடம் பெறவில்லை. இதை நான் தவறாக எடுத்து கொள்ள மாட்டேன்.

விலக மாட்டேன்

நானும், எடியூரப்பாவும் சகோதரர்கள் போல பழகி வருகிறோம். ஆனால் அவர் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை தவறாக புரிந்து கொண்டு உள்ளார். நான் பா.ஜனதா கட்சியை விட்டு விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைய உள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா கூறி வருகிறார். அது பொய்யான தகவல். அவர் கூறியதில் உண்மை இல்லை. என்ன நடந்தாலும் சரி பா.ஜனதா கட்சியை விட்டு, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைய மாட்டேன். பா.ஜனதா கட்சியை விட்டு விலகவும் மாட்டேன். இதற்கிடையே என்னை மேல்–சபை எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து மேலிடம் நீக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளன. அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது போக போக தெரியும்.

இவ்வாறு ஈசுவரப்பா உருக்கமாக கூறினார்.


Next Story