ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டும் கன்னியர்கள்


ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டும் கன்னியர்கள்
x
தினத்தந்தி 14 Jan 2017 8:18 AM IST (Updated: 14 Jan 2017 8:18 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு என்றால் குதித்து ஓடுபவர்கள் இளைஞர்கள்தானே,

ல்லிக்கட்டு என்றால் குதித்து ஓடுபவர்கள் இளைஞர்கள்தானே, இங்கே கல்லூரி மாணவிகள் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்களே என்று விஷயத்தை கேட்டோம்.

“ஏன்? ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடாதா? ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பதே பெண்கள்தான் தெரியுமா?” என்று கேள்வியை எடுத்துப்போட்டார் எஸ்.ஜாய்ஸ்.

“ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய விளையாட்டு. இதை ஏன் தடுக்கிறார்கள்?. எதற்காக தடை விதிக்க வேண்டும்?. இது நம் பண்பாட்டை அழிக்கும் செயல் அல்லவா?” என்று கொதித்தார் ஏ.சுமித்ரா.

“ஜல்லிக்கட்டு போன்று நமது தமிழகத்தில் ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் இருந்தன. இதில் ஒவ்வொன்றாக இழந்துவிட்டோம். கடைசியில் இருக்கும் ஜல்லிக்கட்டையும் இழக்கத்தான் வேண்டுமா?” என்றார் எஸ்.பிரியதர்ஷினி.

“தமிழ் பாரம்பரியத்தில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது ஒரு முக்கியமான காரணத்தை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். அதன் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதால்தான் அனைத்து பாரம்பரியங்களையும் இழந்துகொண்டு தவிக்கிறோம்” என்றார் ஆர்.பால பிருந்தா.

“ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டில் மாட்டை அடக்கி வெற்றி பெற்றால்தான் ஆண்கள் திருமணமே செய்து கொள்ள முடியுமாம். ஆனால் இன்று அப்படி இல்லை. அதனால் இளைஞர்களின் வீரம் குறைந்து விட்டது” என்று கவலைப்பட்டார், எஸ்.நிவேதிதா.

ஜல்லிக்கட்டுக்கு பின்னால் இளைஞர்படை அணிதிரண்டு நிற்கிறது. இதோ இப்போது இந்த கன்னியர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்களது உரையாடல் தொடர்கிறது...

ஜாய்ஸ்:- ஜல்லிக்கட்டு என்று நினைத்தாலே நமது தமிழர்களின் வீரம் நம் கண்முன் கம்பீரமாக விரிகிறது.

சுமித்ரா:- பண்டைய மக்களின் உழைப்பும், உடற்கட்டும், எதற்கும் அஞ்சாத வேகமும்...

பாலபிருந்தா:- ஆனால், இன்று நாம் அப்படிப்பட்ட ஆண்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?

எஸ்.பிரியதர்ஷினி:- எப்படி பார்க்க முடியும்? சில இளைஞர்களின் வீரம், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதில் இல்லை. எத்தனை பெண்களை மடக்குவது என்பதில்தான் இருக்கிறது.

சுமித்ரா:- இன்று ஜல்லிக்கட்டு வேண்டும் என்று இளைஞர்கள் கேட்பது மகிழ்ச்சியான விஷயம். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. இதனை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது. சங்க கால இலக்கியங்களில் கூறும் ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் இன்று மேற்கத்திய கலாசார ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போய்விட்டது. இப்போது மிச்சமிருக்கும் ஒரே விளையாட்டான ஜல்லிக்கட்டையும் விட்டு கொடுத்து விடக் கூடாது.

பாலபிருந்தா:- ஜல்லிக் கட்டுக்கு தடை என்பது நமது கலாசாரத்தை அழிக் கும் செயல். இன்றைய இளைஞர்கள் அதை மீட்க முன்வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. அதே நேரம் இன்றும் இணையதளங்கள், சமூக வலைதளங்களில் அடிமையாக கிடக்கும் மாணவர்களும், இளைஞர்களும் கலாசாரத்தை மீட்கும் போராட்டத்துக்கு முன்வரவேண்டும்.

நிவேதிதா:- முன்பு பெண்கள் தங்கள் கணவனை தேர்ந்து எடுக்கவும் இந்த ஜல்லிக்கட்டை விரும்பினார்கள். இதற்காகவே ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்த்ததாக கூறுகிறார்கள். ஆனால் இந்த காலத்தில் மாடு அடக்கும் ஆண்தான் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்றால் இளம்பெண்களுக்கு திருமணமே நடக்காது...

பிரியதர்ஷினி:- ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஆனால், ஒரு குடும்பத்தை காப்பாற்றும் வீரம் இருக்க வேண்டும். அப்படி உழைக்கும் ஆண்களும் வீரமானவர்கள்தான்.

ஜாய்ஸ்:- இந்த காலத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுக்காத ஆண்கள் அனைவரும் வீரர்கள்தான்.

சுமித்ரா:- ஆமாம்... ஒரு பெண் பிடிக்கவில்லை என்றால் தொடர்ந்து தொல்லை செய்வது, செல்போனில் தொல்லை கொடுப்பது, மனஉளைச்சல் ஏற்படுத்துவது, சக நண்பர்களுடன் சேர்ந்து மனம் புண்படும்படி பெண்களை கிண்டல் செய்வது ஆண்களிடம் பிடிக்காத செயல்கள். இப்படிப்பட்டவர்களை பார்க்கும்போது கோபம்தான் வரும். எனவே ஆண்கள் தங்களிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்துவதே ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போன்றதுதான்.

பிரியதர்ஷினி:- ஆண்களின் செயல்களுக்கு பெண்களும் ஒரு காரணம்தான். தன்னை திருமணம் செய்யும் ஆண் சம்பாதிப்பவனாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்கள், அவர்கள் சாதாரண வேலைகளை செய்வதை விரும்புவதில்லை. குறிப்பாக சேற்றில் இறங்கி விவசாயம் செய்யும் ஆண்கள் என்றால் எந்த பெண்களும் அவர்களை விரும்புவதே இல்லை. இதனால் ஆண்களும் இந்த தொழில்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். விவசாயி உழைக்கவில்லை என்றால், நமக்கு உணவு இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜாய்ஸ்:- பாரம்பரிய அழிப்பு என்பது நமது உடை, உணவு, காலாசாரம் அனைத்தையும் இணைத்தே அழிப்பதுதான். ஜல்லிகட்டு அழிந்தால் மாடுகள் அழியும். விவசாயம் அழியும், நமது உணவுகள் அழியும். இறுதியில் தமிழனின் தனிப்பண்பு அழியும். இதற்கு நாம் துணைபோகக்கூடாது. ஜல்லிக்கட்டு மீட்பு என்பது வெறும் விளையாட்டின் மீட்பு அல்ல. நம் பண்பாட்டின் மீட்பு.

இந்த கன்னியர்கள் விரும்பியபடி தை பிறந்து, ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கட்டும்.

Next Story