திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி முகமை
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணி
தொண்டி,
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி தனபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்ட இயக்குனர் ஆய்வுதிருவாடானை யூனியன் புதுப்பட்டினம் கிராமத்தில் 2014–15–ம் நிதியாண்டில் ரூ.14½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி பார்வையிட்டார். அதன்பின்னர் திருவெற்றியூர் முதல் குளத்தூர் ஊராட்சி குணபதிமங்கலம் கிராமம் வரை ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பில் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டார். அப்போது, சாலையின் தரம் குறித்து அதற்கான கருவி மற்றும் உபகரணங்களின் மூலம் ஆய்வு செய்தார்.
சாலை பணியை விரைந்து முடிக்கவும், தரமாக சாலை அமைக்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து, அச்சங்குடி ஊராட்சியில் தொண்டி–மதுரை சாலையில் இருந்து இளையான்குடி வரை ரூ.49 லட்சத்து 6 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் அந்த கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கண்மாய் ஆழப்படுத்துதல், தூய்மைபாரத இயக்கத்தின் சார்பில் ஆண்டிவயல் கிராமத்தில் மக்கும், மக்கா குப்பைகள் பிரித்தெடுக்கும் குப்பை கிடங்கு, தனிநபர் கழிப்பறை கட்டுதல் போன்ற பணிகளையும் பார்வையிட்ட அவர் இந்த யூனியனில் உள்ள சிறுமலைக்கோட்டை, ஒரிக்கோட்டை ஊராட்சிகளில் தனி நபர் கழிப்பறை கட்டுதல் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் கட்டவிளாகம் ஊராட்சிக்கு சென்ற அவர் அங்குள்ள உடையார் குடியிருப்பு முதல் கூகுடி ஊராட்சி அறனூற்றிவயல் கிராமம் வரை இடை நிரப்பு நிதியின் மூலம் ரூ.1.05 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்களுடன் யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், மாறன், உதவி பொறியாளர்கள் அர்ச்சுணன், திலீபன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் சென்றனர்.