சூளகிரி அருகே பயங்கரம்: வாலிபர் கொடூரக்கொலை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
சூளகிரி அருகே வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை செல்லும் சாலையில் பீலாளம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கல்குவாரிக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியும், தலையில் கல்லைப்போட்டு தாக்கி விட்டும் சென்றுள்ளனர்.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை பார்த்தனர். பின்னர் இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் அந்த வாலிபர் உயிரிழந்தார். கொலையுண்ட வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நேரத்தில் தெலுங்கில் அங்கிருந்தவர்களிடம் பேசி உள்ளார். மேலும், அவரது கையில் ஆங்கிலத்தில் ஷில்பா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
ஓசூரைச் சேர்ந்தவரா?தெலுங்கில் பேசியதால் அவர் சூளகிரி மற்றும் ஓசூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்? என்று சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சூளகிரி அருகே வாலிபரை கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாக கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.