கடலூரில் நள்ளிரவில் பயங்கரம் கார் மெக்கானிக் சரமாரி வெட்டி படுகொலை வாலிபரை கைது


கடலூரில் நள்ளிரவில் பயங்கரம் கார் மெக்கானிக் சரமாரி வெட்டி படுகொலை வாலிபரை கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 5:00 AM IST (Updated: 15 Jan 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பொங்கல் பண்டிகை தினத்தில் நள்ளிரவில் கார் மெக்கானிக் சரமாரியாக வெட்டிப் படுகொலை

கடலூர்,

கடலூரில் பொங்கல் பண்டிகை தினத்தில் நள்ளிரவில் கார் மெக்கானிக் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மெக்கானிக்

கடலூர் வன்னியர்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 52) கார் மெக்கானிக். இவர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடி அய்யனார்கோவில் அருகில் சொந்தமாக ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். திருநெல்வேலியை சேர்ந்த பாதாளம்(28) என்பவர் இங்கு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் முருகன் ஒர்க்ஷாப்பில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் இரவு அங்கேயே படுத்து உறங்கினார். காவலாளி பாதாளமும் அங்கே இருந்தார்.

வெட்டிக் கொலை

பின்னர் நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் அங்கு வந்தார். அவர் படுக்கையில் இருந்த முருகனிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த கரும்பு வெட்டும் அரிவாளால் முருகனின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத முருகன் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை தடுக்க முயன்ற பாதாளத்தையும் வெட்டி கொலை செய்துவிடுவதாக அந்த நபர் மிரட்டினார். இதனால் பயந்து போன பாதாளம் அங்கிருந்து ஓடோடி கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்று முருகனை அந்த நபர் சரமாரியாக வெட்டியது குறித்து கூறினார்.

போலீசார் விரைந்தனர்

அதன்பேரில் கடலூர் திருப்பாதிரிப்பிலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிண அறையில் வைக்கப்பட்டது.

தகவல் அறிந்து கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மனைவி, பிள்ளைகள் கதறல்

வெட்டி கொலை செய்யப்பட்ட முருகனுக்கு வசந்தி(41) என்ற மனைவியும், கார்த்திவாசன்(15) என்ற மகனும், கீர்த்தனா(13), அமுதினி(10) என்ற மகள்களும் உள்ளனர். இவர்களில் கீர்த்திவாசன் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பும், கீர்த்தனா தனியார் பெண்கள் மேல் நிலைபள்ளியில் 8–ம் வகுப்பும், அமுதினி 5–ம் வகுப்பும் படித்து வருகின்றனர். முருகனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

வாலிபர் கைது

இந்த நிலையில் முருகனை கொலை செய்த நபரின் அடையாளம் குறித்து காவலாளி பாதாளத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா என பார்த்தனர். கொலை குறித்து துப்பு துலக்க மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது ஒர்க்ஷாப்பில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒர்க்ஷாப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் முருகனை கொலை செய்த மர்மநபர் அதே பகுதி மேட்டுத்தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் ராஜசேகர் என தெரியவந்தது. அவரை பிடித்து முருகனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story